பொங்குதமிழ் மன்றம், குவைத் – திருக்குறள் வகுப்பு
ஓராண்டு நிறைவும் இரண்டாமாண்டு தொடக்கமும்
நாள்: ஆடவைத் திங்கள் 22ஆம் நாள், தி.ஆண்டு 2042 (7.7.2011), வியாழக்கிழமை
பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் வாரந்தோறும் நடைபெறும் திருக்குறள் வகுப்பின் ஓராண்டு நிறைவு விழாவும் இரண்டாமாண்டு தொடக்க விழாவும் பாகீல் கோகினூர் உணவகத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக பாவலர்.முனு.சிவசங்கரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து, இலங்கைத் தலைநகர் கொழும்புவில் மறைவுற்ற முதுபெரும் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, “குறள் வழிக் காதல் மொழி” என்ற தலைப்பில் திருக்குறள் சிறப்பு வகுப்பினை பொறியாளர் சேதுமாதவன் அவர்கள், படவடிவக் கோப்புகளைக் கொண்டு காணொளிக்காட்சிகள் வழி சிறப்பான முறையில், காதல், பிரிவு, ஊடல், இணக்கம் போன்றக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தினார்கள். பார்வையாளர்கள் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினர்.
ஓராண்டாக சிறப்பான முறையில் திருக்குறள் வகுப்பினை நடத்தி வரும் திரு.சேதுமாதவன் அவர்களுக்கு பொறியாளர்கள் முத்துக்குமரன், இலெட்சுமி நாராயணன், முத்துக்குமார் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பெருமை சேர்த்தனர். திருக்குறள் வகுப்பு நடத்த தமது இல்லத்தில் இடமளித்து பெரிதும் ஆதரவளித்த திரு.இராமன் அவர்களுக்கு பொறியாளர் முத்துக்குமரன், நாகா, முத்துக்குமார் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கினர்.
தொடர்ந்து செல்வி. பிரவீணா மகேசுவின் குறளோதல் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. செல்வி பிரவீணாவுக்கு பொறியாளர் கண்ணன் ரவி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
”குறள் வழி” என்ற விழா சிறப்பு மலரை பொறியாளர் கந்தநாதன் அவர்கள் வெளியிட பொறியாளர் இராசேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
தொடர்ந்து, திருக்குறள் வகுப்பு ஓராண்டை நிறைவினை ஒட்டி 100 பேருக்கு திருக்குறள் நூல் வழங்கப்பட்டது. இதனை, பொறியாளர் இரமேசு குமார், செல்வம், ஓவியர் கொண்டல் ராசு ஆகியோருக்கு வழங்கி பொங்குதமிழ் மன்றத்தின் தலைவர் முத்துக்குமார் தொடங்கிவைக்க, பார்வையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தோழர்.தியாகு அவர்களால் நட்த்தப்பெறும் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியினை அறிமுகப்படுத்தி தோழர் விண்செண்ட் அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து ”வேருக்கு நீர்த்தேடி” என்ற தலைப்பில் தாய்த்தமிழ்ப் பள்ளி குறித்தும் அதன் தேவைகளை வேண்டியும் தோழர் தியாகு உரையாற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
பொறியாளர் கண்ணன்ரவி திருக்குறள் வகுப்பு குறித்தான தனது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்ட்தைத் தொடர்ந்து பொறியாளர் நாகா அவர்களும் பொறியாளர் இலெட்சுமிநாராயணன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இவர்களிருவரும் முறையே உரூபாய் பத்து ஆயிரமும் இருபத்து அய்ந்தாயிரமும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
நிகழ்வின் சிறப்புரையாக பழ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் ”திருவள்ளுவர் வழி வந்த வள்ளலார்” என்றத் தலைப்பில் சிறப்பானதொரு உரையாற்றினார்கள்.
பழ.கிருட்டிணமூர்த்தி அவர்களுக்கு பொங்குதமிழ் மன்றத்தின் இணைச் செயலாளர் பொறியாளர் இராமன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
தொடர்ந்து பொறியாளர் கந்தநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வின் இறுதியாக பொறியாளர் முத்துக்குமரன் அவர்கள் ஆண்டறிக்கையினையும் ஆய்வுரையினையும் வெகுசிறப்பாக வழங்கினார்கள்.
உதயம் உணவகம் உரிமையாளர் தமிழ்த்திரு செயபாலன் அவர்கள், வரும் காலங்களில் திருக்குறள் வகுப்பு நடைபெறும் நாட்களில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இரவு உணவு அளிக்க இசைவு தெரிவித்த்தோடு, தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு உருபாய் அய்ந்தாயிரத்தினையும் வழங்கி மகிழ்ந்தார்.
நிகழ்வின் போது, திருக்குறள் நூல்களின் கண்காட்சியும், பன்னூல் விற்பனையும் நடைபெற்றது.
நிகழ்வினை பாவலர் விருதைபாரி அவர்கள் தொகுத்து வழங்கிட, தமிழ்நாடன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இரவு உணவிற்குப்பின் அனைவரும் பெருமகிழ்வோடு விடைபெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக