மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

சனி, 18 பிப்ரவரி, 2012

தமிழ்த்திணை -02


பொங்குதமிழ் கலை இலக்கிய மன்றத்தின் திங்கள் கூட்டம் “தமிழ்த்திணை-2”, கும்பம் 05, வெள்ளிக்கிழமை அன்று “பண்டிதர் அயோத்திதாசர்” நினைவரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்த்திரு.இரவிக்குமார் அவர்கள் தலைமையேற்க, தோழர்.தமிழ்நாடன் அவர்கள் அவைத்தலைவராக இருந்து நடத்தித் தந்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தோழர்கள் பாலாசி, விருதை பாரி, செந்தில்குமார் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினர். தொடர்ந்து தோழர். செல்வக்குமார் அவர்கள் ”குறளும் பொருளும்”  என்றத்தலைப்பில் “இதனை இவன் முடிக்கும்…” என்ற அய்யனின் குறள் ஓதி பொருள் கூறினார்.
திசையெட்டும்… தேரோட்டும் என்ற தோழர்.ஆதியின் தமிழ்த்தாய் வாழ்த்தினைப்பாடி தோழர்.கலையழகன் அவர்கள் “இசையரங்கினை தொடங்கிவைக்க, தோழர்.டென்சில் அவர்கள் அய்யா காசி ஆனந்தனின் தமிழா நீ பேசுவது தமிழா என்றப் பாடலை பாடினார். மண் மணக்கும் கிராமியப்பாடல்களும் பாடப்பெற்றன.
அடுத்து, “நினைக்க வேண்டிய மேலோர்” என்றத் தலைப்பில் அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்களை தோழர். இரகுநாதன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.
பழந்தமிழர் ஆற்றல்களைப் பகிரும் “தொல்தமிழகம்” நிகழ்வில் தோழர். விருதைப் பாரி அவர்கள் பண்டைத்தமிழரின் நீர்ப்பாசன முறைகளையும், கரிகால் பெருவளத்தான் வழங்கிய கல்லணைக் குறித்த செய்திகளையும் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்த்துக் கலைஞர் தோழர். மு.நாகராசனை அரங்கிற்கு தோழர்.தமிழ்நாடன் அவர்கள் அறிமுகப்படுத்திட, பொங்குதமிழ் மன்ற ஆலோசகர் தமிழ்த்திரு. குரு.முத்துக்குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள். பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் நூல்களை நிகழ்ச்சியின் தலைவர் தமிழ்த்திரு இரவிக்குமார் அவர்கள் பரிசளித்தார்கள்.
தேநீர் இடைவேளையினைத் தொடர்ந்து, தோழர். மு.நாகராசன் அவர்கள், “பழந்தமிழர் கலைகளின் இன்றைய நிலை” என்ற தலைப்பில், தமிழர்கள் கலைகள், கலைஞர்கள் நிலை, எதிர்காலம் குறித்தும் விரிவான உரையாற்றினார்.
தொடர்ந்து, பாவிருந்து என்ற தலைப்பில் பட்டிணத்தார் பாடல்களைப் பாடி அதன் பொருள்விளக்கி தோழர். பகலவன் உரை நிகழ்த்தினார்.
”நூலறிவோம்” என்ற பகுதியில், தமிழ்த்திரு. க.ப.அறவாணன் அவர்களின் “தமிழர் அடிமையானது ஏன்”? எவ்வாறு?” என்ற நூல் குறித்தும் அதன் பொருள் குறித்தும் தோழர். பாலாசி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அடுத்து, “பைந்தமிழே முதன் மொழி” என்றத் தலைப்பில், கவிதாயினி தேவிரவி, கவிஞர்கள் கழனிவாசல் கவி சேகரன், பட்டுக்கோட்டை சத்யா, கருங்குளம் சிவமணி ஆகியோர் கவிதைகளை அரங்கேற்றினர்.
நிறைவாக, சிலப்பதிகாரம் தொடர் சொற்பொழிவினை தமிழ்த்திரு. பழ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் நிகழ்த்த, பயணிகள் சார்பில் வெளியிடப்பட்ட அணு உலை நாட்காட்டியை நிகழ்வின் தலைவர் தமிழ்த்திரு இரவிக்குமார் அவர்கள் வெளியிட கவிஞர். சேந்தை இரவி அவர்கள் பெற்றுகொண்டார். இந்நாட்காட்டி நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மேலதிக ஒளிப்படங்களை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக