மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

வியாழன், 21 பிப்ரவரி, 2013

கதை சொல்லி பாரம்பரிய உணவுத் திருவிழா

அன்புடையீர்,
வணக்கம்.
எதிர்வரும் குவைத் விடுதலை நாளில் (25-02-2013) பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் கீழ்க்காணும் நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்க பதிவு செய்தல் கட்டாயமாகும். அரங்கம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திட இது மிகுந்த பயனளிக்கும். காலம் குறைவாக உள்ளதால் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் உடன் பதிவு செய்தல் வேண்டும். சனிக்கிழமை (23-02-2013) இரவு 10 மணிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.
இம்மின்னஞ்சலுக்கு பதிலிடுவதன் வழியோ, இம்மின்னஞ்சலில் காணும் பதிவு முறையிலோ, கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியோ பதிவு செய்யலாம்.இந்நிகழ்வில் பங்களிப்பை நல்கும் அனைவருக்கும் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்படும்.

நாள்: 25-02-2013
நேரம்: காலை 09 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை

இடம்: தமிழ்த்திணை அரங்கம் மங்காப் (வரைபடத்தினை இவ்விணைப்பில் சென்று காணலாம் http://ponguthamizh.blogspot.com/2013/02/blog-post.html )
நிகழ்ச்சி நிரல்:

1. கதை சொல்லி: குழந்தைகள் பெரியோர் என அனைவரும் பங்கேற்கலாம். தமிழகத்தின் பாரம்பரியக் கதைகள், பாட்டி சொல்லும் கதைகள், கிராமியக் கதைகள், குழந்தைக்கதைகள், கதைப் பாடல்கள் போன்றவற்றை அரங்கேற்றலாம். ஒருவரே பல கதைகள் கூறலாம். கால அளவைப் பொறுத்து அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு கதையும் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. பாரம்பரிய உணவு: தமிழரின் பாரம்பரிய உணவினை தயாரித்து அளிக்கலாம். இவை விற்பனைக்கு மட்டுமே. உணவு தயாரித்து வழங்க்குபவர்களுக்கு சான்றிதழ், பரிசோடு விற்பனையின் வழி கிடைக்கும் இலாபத்தில் பங்கு அளிக்கப்படும். அவரவர்கள் இயன்ற அளவில் தயாரித்து வழங்கலாம். அவை பற்றிய  விளக்கத்தினை பதிவு செய்யும் போது குறிப்பிட வேண்டும்.

3. தமிழர் மருத்துவம் உணவு குறித்த கண்காட்சியும் இடம்பெறும்.
4. பாரம்பரிய உணவு விற்பனை: தமிழரின் பாரம்பரிய உணவுகள் நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வைக்கப்படும். இருப்பை பொறுத்து விற்பனை காலம் அமையும். உணவுகள் குறிப்பிட்ட அளவுகளிலேயே வழங்கப்படும். இதற்கு பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பதிவு செயத்தேவையான குறிப்புகள்:
1. பெயர்:
2. தொடர்பு எண்:
3. பங்கேற்கும் நிகழ்ச்சி:
4. தலைப்பு, காலம், அளவு உள்ளிட்ட விளக்கம்.
அரங்கத்தின் வசதிக்கேற்ப பதிவுகள் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.
நன்றி
கதை சொல்லி பாரம்பரிய உணவுத் திருவிழா நிகழ்வில் பங்குகொள்ள விருப்பமுடையோர் கீழே உள்ள பெட்டிகளில் தேர்வு செய்க:

https://docs.google.com/forms/d/1n9uSG3RqHTFQDpD5wELAVuVh0eXgMBNyZeGdiicKC4Y/viewform

திங்கள், 2 ஏப்ரல், 2012

அழைப்பிதழ் - யாதும் ஊரே! யாவரும் கேளிர்! - அ.முத்துகிருஷ்ணண் உரை

அன்புடன் அழைக்கின்றோம்

அன்பிற்கினிய குவைத் வாழ் தமிழ் உறவுகளே!

எழுத்தாளரும், சமூக சிந்தனையாளரும், செயற்பாட்டாளருமான தோழர். அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இரண்டாம் முறையாக பாலஸ்தீனத்திற்கு பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பும் வழியில் துபாய் குவைத் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்.

அந்த வகையில், குவைத்தில் 06-04-2012 வெள்ளிக்கிழமை காலை ஓவியர் கொண்டல்ராஜின் ஓவியக் கண்காட்சியிலும், மாலை பொங்குதமிழ் மன்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதோடு, சனிக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்வில் இவரது “நஞ்சாகும் நீதி” என்ற புதிய கட்டுரைத் தொகுதியும் வெளியிடப்படுகிறது.

இந்நூலினை தமிழ்நாடு பொறியாளர் குழுமத்தின் தலைவர் திரு.இலட்சுமிநாராயணன் அவர்கள் வெளியிட, தமிழ்நாடு பொறியாளர் குழும செயலாளரும், பொங்குதமிழ் மன்ற ஆலோசகருமான திரு.குரு.முத்துக்குமார் அவர்கள் முதல் படியை பெற்றுக்கொள்வார்.

இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் தோழர்.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள், தனது பாலஸ்தீன அனுபவம் குறித்தும், தமிழ் இலக்கியம், மனிதநேயம்... குறித்தும் உரையாற்றுகிறார்.

தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.


மங்காஃப் அரங்க வரைபடம்



ஃபாகீல் அரங்க வரைபடம்


மேலதிக தொடர்புகளுகு: தமிழ்நாடன் - 66852906.

நன்றி!.

செவ்வாய், 20 மார்ச், 2012

தமிழ்த்திணை -03 தொகுப்புரை

தமிழ்த்திணை -03இனை திரு.இராவணன் அவர்கள் தலைமேற்று சிறப்பித்திட, திரு.இராமன் அவர்கள் அவைத்தலைவராக இருந்து நடத்தித்தந்தார். திருமதி. தேவிரவி அவர்களும் திருமதி.பொன்னிராமன் அவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிகழ்ச்சியினைத் தொடங்கிவைத்தனர்.

தொடர்ந்து, கோல்கானூர் அதியமான் அவர்கள் குறளும் பொருளும் என்றத்தலைப்பில் குறளோதிட, திரு. செல்வக்குமார் அவர்கள் தமிழ்த்திரு.வ.சுப.மாணிக்கனார் அவர்களைப் பற்றி “நினைக்க வேண்டிய மேலோர்” என்றத்தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

தோழர்கள். கலையரசன், நம்மபாட்டு மாணிக்கம், இராமகிருட்டிணன் ஆகியோர் தமிழிசைப்பாடல்களைப் பாடி இசையரங்கை நிறைவு செய்தனர்.  தோழர்.நம்மபாட்டு மாணிக்கம் அவர்கள், தாமே இயற்றி, இசையமைத்து பாடிய அணுவுலைத் தீமைகள் பற்றிய பாடல் அனைவராலும் விரும்பப்பட்டது.

அடுத்து திரு.சேதுமாதவன் அவர்கள் இலக்கிய நயம் என்ற பகுதியில் “காலம் கடந்த தமிழிலக்கியம்” என்றத்தலைப்பில் உரையாற்றிட, நூலறிவோம் பகுதியில் திரு. இரகுநாதன் அவர்கள் நற்றிணையை அறிமுகம் செய்தார்.

மலேசியா சிங்கப்பூர் நாடுகளுக்காக பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று, 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஒலிம்பிக்கில் இரண்டு முறை பங்குகொண்டவரான மலேசியத்தமிழர் தமித்திரு. மாணிக்கம் அவர்களை, நிகழ்வின் தலைவரும் அவைத்தலைவரும் இணைந்து பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினர். இவரை அரங்கிற்கு திரு. விருதைபாரி அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து, திரு. மாணிக்கம் அவர்கள் தனது அனுபவங்களை அவையில் பகிர்ந்துகொண்டார்.



தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, ”தமிழா விழி” என்றத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற, தொல்தமிழகம் என்றப் பிரிவில் திரு.செந்தில்குமார் அவர்கள் பழந்தமிழரின் கட்டிடக்கலை குறித்து உரைநிகழ்த்தினார்.

திரு.இராவணன் அவர்கள் தமது தலைமையுரையில் நிகழ்வினையும் பொங்குதமிழ் மன்ற செயல்பாடுகளையும் வாழ்த்தி ஊக்கமளித்தார்.

திரு. நாகராசன் அவர்கள் தமிழர்கலைகள் என்றத் தலைப்பில் உரையாற்றிட, திரு.பழ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் சிலப்பதிகாரம் தொடர்சொற்பொழிவினை நிகழ்த்தி நிறைவுசெய்தார்.

இந்நிகழ்வின் ஒளிப்படங்களை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
https://picasaweb.google.com/109260542832228774761/03?authuser=0&feat=directlink

தமிழ்த்திணை -03 அழைப்பிதழ்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பைந்தமிழ் முதன் மொழி - தமிழ்த்திணை-2 கவியரங்கம்

தேவி ரவி:

எங்கும் தமிழ் ,எதிலும் தமிழ் -‍ தன்

அங்கம் தமிழ், அசைவும் தமிழ்

எண்ண‌ம் தமிழ், எழுத்தும் தமிழ்

ப‌ங்க‌ம் த‌மிழுக்கென்றால் - இது

பொங்கு(ம்) த‌மிழ் .....!



எங்கள்

காரை நகரில் கம்பனின் தமிழ்

ஊரே போற்றும் உன்னத தமிழ்

பாரையும் ஆண்ட பரம்பரைத் தமிழ்

தேரையும் "பாரி"தர உந்திய தமிழ் ...!



ஒளவை பாட்டியின் அமுதமொழி தமிழ்

அதியமான் கண்ட ஆட்சிமொழி தமிழ்

பாண்டிய மன்னன் வேண்டிய தமிழ்

பாவேந்தர் பாடியதும் இப்பாகு தமிழ் ….!



சோழ வம்சத்தின் சொத்தும் தமிழ்

சோழனின் மனுநீதிக்கு வித்தும் தமிழ்

வள்ளுவன் வளர்த்த வளமைமொழி தமிழ்

வல்லளார் அன்போடு வணங்கியதும் தமிழ் …!



இதிகாச காலத்தில் இருந்ததும் தமிழ்

அதிசயமாய் நயாகரா அருவியிலும் தமிழ்

விடியலுக்காய் போராடி வீழாத தமிழ்

வீறுகொண்டு புலியாய் பாய்வதும் தமிழ் …!



எந்தையும் யாய்யும் பேசும்மொழி தமிழ்

சிந்தையில் சுழலும் சுந்தரத் தமிழ்

சிந்துகவி புனையும் இச்சங்கத் தமிழ்

பிந்தைய நாளிலும் இறவா தமிழ் …!











மகாகவியால் மலர் மாலையானது தமிழ்

மாமேதைகள் பலர்பார்த்து மலைத்ததும் தமிழ்

தொல்காப்பியம் நம் தோழனானதில் தமிழ்

தொடவே முடியாத சிகரத்தில் தமிழ் ...!



அகம், புறம் அறியச் செய்தது தமிழ்

அறிய பல சொற்களை அறிமுகப்படுத்தியது தமிழ்

ஆங்கிலம் பேசுவோரை விட, அதிகம் பேசும் மொழி தமிழ்

ஆனாலும் ஈழத்தில் இன்னும் ம்லரவில்லை தமிழ் ...!



ஆறு காப்பியங்களை அணிகலன்கலாய் கொண்டது தமிழ்

ஆகாயம் உள்ள மட்டும் அழியாதது தமிழ்

அயல் பல்கலையில் விரும்பி படிக்கப்படுவது தமிழ்

யுனெஸ்கோ அயராது வெளியிடும் இதழ் தமிழ் ....!



உருக்குலைக்க முடியாத உன்னத தமிழ்

ஒற்றுமையாய் நாமிருந்தால் உயரும் தமிழ்

உலத்தின் முதல் மொழியாம் பைந்தமிழ் – ஒவ்வொருவரின்

ஊனுக்குள்ளும் ஊடுருவ வேண்டும் நம் செந்தமிழ் .....!

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

தானேநிதி கொடையளிப்பு

மன்றத்தின் சார்பில் குவைத் வாழ் தமிழர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உரூபாய் 50,000.00அய், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் திரு. பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் உதவியாலும் முன்னிலையிலும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியிலும் குள்ளஞ்சாவடியிலும் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் அளிக்கப்பட்டது.





உதவிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்!

சனி, 18 பிப்ரவரி, 2012

தமிழ்த்திணை -02, ஒளிப்படங்கள்

தமிழ்த்திணை -02


பொங்குதமிழ் கலை இலக்கிய மன்றத்தின் திங்கள் கூட்டம் “தமிழ்த்திணை-2”, கும்பம் 05, வெள்ளிக்கிழமை அன்று “பண்டிதர் அயோத்திதாசர்” நினைவரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்த்திரு.இரவிக்குமார் அவர்கள் தலைமையேற்க, தோழர்.தமிழ்நாடன் அவர்கள் அவைத்தலைவராக இருந்து நடத்தித் தந்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தோழர்கள் பாலாசி, விருதை பாரி, செந்தில்குமார் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினர். தொடர்ந்து தோழர். செல்வக்குமார் அவர்கள் ”குறளும் பொருளும்”  என்றத்தலைப்பில் “இதனை இவன் முடிக்கும்…” என்ற அய்யனின் குறள் ஓதி பொருள் கூறினார்.
திசையெட்டும்… தேரோட்டும் என்ற தோழர்.ஆதியின் தமிழ்த்தாய் வாழ்த்தினைப்பாடி தோழர்.கலையழகன் அவர்கள் “இசையரங்கினை தொடங்கிவைக்க, தோழர்.டென்சில் அவர்கள் அய்யா காசி ஆனந்தனின் தமிழா நீ பேசுவது தமிழா என்றப் பாடலை பாடினார். மண் மணக்கும் கிராமியப்பாடல்களும் பாடப்பெற்றன.
அடுத்து, “நினைக்க வேண்டிய மேலோர்” என்றத் தலைப்பில் அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்களை தோழர். இரகுநாதன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.
பழந்தமிழர் ஆற்றல்களைப் பகிரும் “தொல்தமிழகம்” நிகழ்வில் தோழர். விருதைப் பாரி அவர்கள் பண்டைத்தமிழரின் நீர்ப்பாசன முறைகளையும், கரிகால் பெருவளத்தான் வழங்கிய கல்லணைக் குறித்த செய்திகளையும் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்த்துக் கலைஞர் தோழர். மு.நாகராசனை அரங்கிற்கு தோழர்.தமிழ்நாடன் அவர்கள் அறிமுகப்படுத்திட, பொங்குதமிழ் மன்ற ஆலோசகர் தமிழ்த்திரு. குரு.முத்துக்குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள். பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் நூல்களை நிகழ்ச்சியின் தலைவர் தமிழ்த்திரு இரவிக்குமார் அவர்கள் பரிசளித்தார்கள்.
தேநீர் இடைவேளையினைத் தொடர்ந்து, தோழர். மு.நாகராசன் அவர்கள், “பழந்தமிழர் கலைகளின் இன்றைய நிலை” என்ற தலைப்பில், தமிழர்கள் கலைகள், கலைஞர்கள் நிலை, எதிர்காலம் குறித்தும் விரிவான உரையாற்றினார்.
தொடர்ந்து, பாவிருந்து என்ற தலைப்பில் பட்டிணத்தார் பாடல்களைப் பாடி அதன் பொருள்விளக்கி தோழர். பகலவன் உரை நிகழ்த்தினார்.
”நூலறிவோம்” என்ற பகுதியில், தமிழ்த்திரு. க.ப.அறவாணன் அவர்களின் “தமிழர் அடிமையானது ஏன்”? எவ்வாறு?” என்ற நூல் குறித்தும் அதன் பொருள் குறித்தும் தோழர். பாலாசி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அடுத்து, “பைந்தமிழே முதன் மொழி” என்றத் தலைப்பில், கவிதாயினி தேவிரவி, கவிஞர்கள் கழனிவாசல் கவி சேகரன், பட்டுக்கோட்டை சத்யா, கருங்குளம் சிவமணி ஆகியோர் கவிதைகளை அரங்கேற்றினர்.
நிறைவாக, சிலப்பதிகாரம் தொடர் சொற்பொழிவினை தமிழ்த்திரு. பழ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் நிகழ்த்த, பயணிகள் சார்பில் வெளியிடப்பட்ட அணு உலை நாட்காட்டியை நிகழ்வின் தலைவர் தமிழ்த்திரு இரவிக்குமார் அவர்கள் வெளியிட கவிஞர். சேந்தை இரவி அவர்கள் பெற்றுகொண்டார். இந்நாட்காட்டி நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மேலதிக ஒளிப்படங்களை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்: