மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

புதன், 24 ஆகஸ்ட், 2011

திருவள்ளுவர் ஆண்டு 2042, மடங்கல் 01 வியாழன் மாலை [ 18 -08 -2011]

திருக்குறள் வகுப்பு

வணக்கம்..! பெண்கள் மென்மையானவர்கள்..சிறியத் துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள்..என்பது ஆண்களின் தவறான நினைப்பு..! ஏன் சிலப் பெண்களும் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.! அதனால்தான் திருமணம் நடக்கும்போது பெண்ணைப்பெற்றவர்கள் மாப்பிள்ளையிடம் என் பெண்ணை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள் ! ஆனால் உண்மை அதுவல்ல. வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் பெண்கள் உறுதியான மனநிலையில்தான் துயரங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்கிறார்கள்..! எடுத்துசொல்ல வேண்டுமெனில்  தமிழீழப்போரில் பெண் போராளிகள் அணிஅணியாக பங்கெடுத்துக் கொண்டதை நாம் அனைவருமே கனத்த மனத்தோடு கவனித்துக் கொண்டுதானே இருந்தோம்...! ஆகவேதான் இந்தவார அதிகாரமான இடுக்கண் அழியாமைக்கு   திருமதி.பாரதி தமிழ்நாடனை ஆசிரியையாக வகுப்புத் தேர்ந்தெடுத்துக் கொண்டது சாலப்பொருந்தியது..!

திரு.இராமன்பொன்னி அவர்களின் இல்லத்தில் வகுப்பு எப்போதும்போல் மாலை ஏழுமணிஅளவில் இனிமையாகத் துவங்கியது.! இடுக்கண் வருங்கால் நகுக என்னும் முதல் குறள் எல்லோரும் அறிந்த குறளாக இருப்பினும் உணர்ந்த குறளாக இல்லை என்பதற்கு பெருகிவரும் தற்கொலை முடிவுகளே சான்றுகள்..! எனவேதான்  தாயுள்ளத்தோடு சாலப்பரிந்து பிள்ளைகளிடம் இருந்தே படிப்பினையைத் தொடங்க வேண்டும் என்றார் நம் ஆசிரியை..!

அடுத்த இரண்டு குறள்களிலும் துன்பத்தைக்கண்டு துவளாதவர்களை குறிப்பிடும் வள்ளுவரைப் பாராட்டி வகுப்பைத் தொடர்ந்தார் ஆசிரியை..! மஞ்சுவிரட்டில் எதிர்த்து வருவோரையெல்லாம் கண்டு சிறிதும் பின்வாங்காமல் பகடு (காளை) முன்னேறுவதில் மட்டுமே குறியாக இருப்பதை ஆசிரியை வள்ளுவக் கருத்தோடு ஒட்டி விளக்கியது நான்காம் குறளுக்கு நயம் சேர்த்தது.! பிள்ளைகளிடம் வெற்றியின் இனிப்பை மட்டுமே ஊட்டி வளர்க்காமல் தோல்வியின் துவர்ப்பையும் சுவைக்க பழக்கவேண்டும் என்று ஆசிரியை ஆழ்ந்து கூறி  இன்றைய போட்டியும் பொறாமையும் நிறைந்த பெற்றோர்களின் தலையில் நங்கென்று ஒரு குட்டு குட்டினார்..!

சிலந்தி- வலை- சிந்தனை பழையதே என்றாலும்
சிக்கல் வரும்போது யாரும் சீர்தூக்கிப் பார்ப்பது இல்லையே..! அதனால்தான் ஆசிரியை ஐந்தாம் குறளுக்கு அதை மீண்டும் அடிக்கோடு இட்டுக் காட்டினார் ! போதும் என்ற மனம் உள்ளவர்கள் செல்வம் வரும்போதும் போகும்போதும் ஒரே மனநிலையில்தான் இருப்பார்கள் என்று ஆறாம் ஆறாம் குறளை விளக்கிய ஆசிரியை, அனுபவம் உள்ளவர்களும் மூத்தோர்களும் உடம்பிற்கு நோய் வரும்போது அதைக் கண்டு அஞ்சாமல் பக்குவமாக அந்த நோயை விரட்டும் வழியை கண்டடைவார்கள் என்று அடுத்தவந்த குறளுக்கும் பொருள்கூறி வகுப்பை தொய்வின்றித் தொடர்ந்தார் ஆசிரியை.!

இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை என்றும் அதை ஏற்றுக்கொள்வதே வளர்ச்சியின் முதற்படி என்றும் துன்பத்தையும் இன்பமாக நினைத்தால் துன்பம் நம்மைவிட்டு தூரவிலகி போய்விடும் என்றும் தொடர்ந்துவந்த குறள்களுக்கு பொருள் கூறினார் ஆசிரியை..! புடம்போடும்போது தங்கமும் பொலி இடும் போது சிற்பமும் வலித் தாங்குவதால்தான் பொலிவுற  முடிகிறது என இறுதிக் குறளுக்கு எல்லோரும் விளங்கிக்கொள்ளும்படி எடுத்துக்காட்டுக்களோடு பொருள் கூறி இன்னல் வரும்போது இன்முகத்துடன் ஏற்றுக்கொள்பவரை எதிரியும் மதிப்பார் என்று அருமையான விளக்கத்தையும் கூறி வகுப்பை இனிதே நிறைவு செய்தார் ஆசிரியை...!

தொடர்ந்த கருத்தாடலில் பிள்ளைவளர்ப்புப் பற்றி பெரிதும் பேசப்பட்டது..! ஏறு என்ற சொல் காளைக்கும் பொருந்தும். அது வெறும் பெயராக மட்டும் இல்லாமல் அதன் குணத்தையும்  குறிப்பதாக இருப்பது  தமிழ்ச் சொற்களின் சிறப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று வகுப்பு தமிழோடு விளையாடி மகிழ்ந்தது..!

தமிழர்கள் இடையில் தமிழ்மொழிப் பற்றிய மதிப்பீடுகள்  குறித்து வகுப்பு வரிந்துகட்டி  வாள் வீசினாலும் புரிந்துகொண்டு கைகோர்த்துக் களித்தது.!
அருமையான இரவு உணவு வழங்கும் உதயம் உணவகத்தை நெஞ்சார வாழ்த்தி இரண்டு பசியும் இனிதே தீர...வகுப்பு கனிந்த மனதுடன் கலைந்தது..!

நன்றி..!                                 முனு. சிவசங்கரன்..!  

புதன், 10 ஆகஸ்ட், 2011

திருக்குறள் வகுப்பு..! தி.ஆண்டு 2042, கடகம் 19

வணக்கம்..! இடைவேளையின்றி எப்போதும் இனிய திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமாம்..! ஒரு முன்னணி காட்சி ஊடகம் கூக்குரலிடுகிறது !
கண்ணீரைக் காசாக்கிப் பெண்ணினத்தை பின்னோக்கி  இழுக்கிறது.. சின்னத்திரை சித்திரங்கள்..! என்ன செய்யலாம் ? சோம்பிக் கிடப்பதற்கு தமிழனுக்குச் சொல்லியா தரவேண்டும் ? அவர்களைத் தூக்கத்திலிருந்து சுருக்கென்று குத்தி எழுப்ப ஒரு சூட்டுக்கோல் வேண்டும்..! அதற்காகத்தான்  இதோ இன்றைய வாரம் நம் வகுப்பாசிரியர் மடியின்மை அதிகாரத்தை நம் மனவெளியில் பதிக்கின்றாரோ..!
திருவள்ளுவர் குடிபெருமை பற்றி இந்த அதிகாரத்தில் மிகுதியாகவே கூறுகின்றார். ஆசிரியர் அதை கருத்துவேற்றுமைக்கு இடமின்றி குடி என்றால் குடும்பம் என்றும் பரம்பரை என்றும் தலைமுறை என்றும் கூறி அமட்டியது குறிப்பிடவேண்டியது.!
விளக்கை வைத்து முதல் குறளை தொடங்கிய வள்ளுவனின்  வாய்மொழியை பின்பற்றி  சுறுசுறுப்புடன் வகுப்பைத் தொடங்கினார் ஆசிரியர். ! ஒரு குடி ஆவதற்கும் அழிவதற்கும் தீய வழிகளில் செல்வதற்கும் சோம்பலே காரணம் என்று அடுத்த வந்த மூன்று குறள்களின் பொருளையும் விளக்கி தனக்கு பிடித்தமானது என்று ஐந்தாவது குறளை கூறினார்.!
அரசரின் துணையே இருந்தாலும் முயற்சி இல்லாதவர் முன்னேற மாட்டார் எனவும் அந்த அரசரும்கூட முயற்சியற்று இருப்பின் அமைச்சர்கள் இடித்துரைக்கும் நிலைக்கு ஆளாவார் எனவும் பகைவர்க்கு அடிமை ஆக நேரிடும் எனவும் தொடர்ந்த குறள்களின் வழியே வள்ளுவரின் கருத்தை வலியுறுத்தினார் ஆசிரியர்..! குடியின் பெருமை குலைந்து போயிருந்தாலும் முயற்சியுள்ள ஒருவர் அக்குடியை நிமிர்ந்தெழ வைத்துவிட முடியும் என்ற கருத்தை ஒன்பதாவது குறள்மூலம் விளக்கிக்கூறினார் ஆசிரியர்..! இறுதியாக மடியில்லாத மன்னவன் இந்தமாநிலம் முழுவதும் ஆளமுடியும் என்று புராண எடுத்துக்காட்டு மூலம் எடுத்துரைத்து வகுப்பை இனிமையாக நிறைவு செய்தார் ஆசிரியர்..!
அன்றைய தினம் ஆசிரியர் தாயகத்துக்கு பயணம் செல்லும் அவசரத்தில் இருந்தார்..! அப்போது பொங்கு தமிழ் மன்றத்தின் சார்பாக வேருக்கு நீர்தேடும் தாய்தமிழ்ப் பள்ளிக்கு உருபாய் ஒரு இலட்சம் காசோலையாக அவரிடம் கொடுத்தனுப்பபட்டது...! ஒரு நெகிழ்வான செய்தி என்னவெனில் சேர்ந்த நன்கொடை ஒரு இலட்சமாக முழுமைபெற பத்தாயிரத்தை மன்றம் சுமை ஏற்றிருந்தது !  அதை தன் தோளில் தாங்கிக்கொண்டார் தமிழ்த்திரு.பாலமுத்துகுமரன் அவர்கள்..!
பிறகு கருத்தாடல்கள் தொடர்ந்தன. "ஓய்வு என்ற ஆடை அழகானது. ஆனால் அதை தொடர்ந்து அணியக் கூடாது.." என்று படித்தக்கருத்தை பதிவுசெய்தார் அருணாமாணிக்கவாசகம் அவர்கள்!
"ஓய்வு என்பதும் சலிப்பென்பதும் தற்கொலைக்கு சமம்" என்ற பெரியாரின் கருத்து  வகுப்பில் வலிமையுடன் பதியப்பட்டது.! சமூகத்தை சீர்கெடுக்கும் தீய பழக்கங்களை ஒழிப்பதில் அரசாங்கத்தின் கடமை பற்றியும் ஊடங்கங்களின் கடமைப் பற்றியும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது..!  இறுக்கமான இலக்கண விதிகளோடும் எடுத்துக்கொண்ட கருத்தை வழுவாது நின்று வலியுறுத்திக் கூறுவதாலும்தான் திருக்குறள் அதிகாரம் அதிகாரமாக அமைக்கப்பட்டது என அருளாளர் திரு. புருஷோத்தமன் அவர்கள் அதிகாரத்துக்கு பொருள் கூறியது குறிப்பிடத் தகுந்தது..! 
மனிதர்களுக்கு தூக்கம் ஒருநாளைக்கு எத்தனை மணி நேரம் அவசியம் என்பதில் பலவேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன ..! இறுதியாக உதயம் வழங்கிய அருமையான இரவு உணவோடு வகுப்பு இனிதே நிறைவெய்தியது..! சூழலின் காரணமாக இன்றைய வகுப்பு தமிழ்த்திரு. இரவி கண்ணன் அவர்கள் வீட்டில் நடத்தப்பட்டது நன்றிக்கு அப்பாற்பட்டது..!   

நன்றி..!                     
                                                                              முனு. சிவசங்கரன் !

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

தாய்த்தமிழ்ப் பள்ளி நிதியளிப்பு

அன்புடையீர்,

கடந்த 07.07.2011 அன்று நடைபெற்ற, திருக்குறள் வகுப்பு ஓராண்டு நிறைவு நாள் நிகழ்வில், தோழர்.தியாகு அவர்களைத் தாளாளர் ஆகக்கொண்டு நடைபெறும் அம்பத்தூர் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு நிதிக்கொடையளிக்க வேண்டினோம். அதற்கிணங்க அன்பர்கள் பலரின் பங்களிப்போடு உரூபாய் ஓரிலக்கம் (ஒரு இலட்சம்) திரட்டப்பட்டது.

இதனை, இன்று (05.08.2011) காலை 1030மணி அளவில், தாயகப்பயணம் மேற்கொண்டுள்ள நமது மன்றத்தின் துணைத்தலைவர் தமிழ்த்திரு. சேதுமாதவன் அவர்கள் தோழர்.தியாகுவினை அவரது சூளைமேடு அலுவலகத்தில் நேரில் கண்டு கையளித்தார். இதனைப் பெற்றுக்கொண்ட தோழர்.தியாகு அவர்கள், கொடையளித்த அனைவருக்கும் தமது நன்றியினையும் பொங்குதமிழ் மன்றத்திற்கும் குவைத் தமிழர்களுக்கும் தமது வாழ்த்தினையும் தெரிவித்தார்கள்.

கொடையாளர்களுக்கு பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் மிகுந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு, தொடர்ந்தும் இதுபோன்ற பணிகளுக்கு அனைவரும் உதவிடவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.