மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

திங்கள், 25 ஜூலை, 2011

திருவள்ளுவர் ஆண்டு 2042, கடகம் 05 வியாழன் மாலை [ 21 -07 -2011]

திருக்குறள் வகுப்பு..!

திருவள்ளுவர் ஆண்டு 2042  கடந்தவாரம் வியாழன் அன்று மாலை [ 21 -07 -2011]
திரு. பொன்னிராமன் அவர்கள் இல்லத்தில் பொங்குதமிழ் மன்றத்தின்   சார்பாக               குறள்வகுப்பு  ஆசிரியர் திரு.சேதுமாதவன் அவர்களால் வழக்கம்போல் நடந்தது !  நாட்டின் செயல்திறனற்ற உளவுத்துறையால் நாசவேலைகள் திட்டமிடப்படுவதை அறியமுடியாமல் நாம் பேரிழப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில்  ஒற்றாடல் அதிகாரத்தை ஆசிரியர் எடுத்துக்கொண்டது எதிர்பாராமல் அமைந்த சிறப்பாகும் !
நாட்டின் வளச்சிக்கு ஒற்றாடலின் இன்றியமையாமை , அதை கையாளும் விதம், இல்லையெனில் ஏற்படும் தோல்வி, ஒற்றாடலின் தன்மை, பணியமர்த்தப்படும் ஒற்றர்களின் தரம் என்று முறையே முன் ஐந்து குறள் வழியே வகுக்கப்பட்டதை
ஆசிரியர் தெளிவாய் எடுத்துரைத்தார்..! ஒற்றர்களின் திறன், ஐயமற்றத் தெளிவு,
ஒற்றரையும் ஒற்றரியவேண்டிய அவசியம், ஒரு தகவலை மூவரை வைத்து
தெளிவடைதல் என்ற நான்கு கோட்பாட்டையும் அடுத்து வரும் குறள்களில் பொதிந்திருந்ததை ஆசிரியர் வெளிப்படுத்தி விளக்கியவிதம் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி இருந்தது.! இறுதியாக ஒற்றர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் எவருமே அறியாவண்ணம் இருக்கவேண்டும் என்று அதிகார இறுதியில் ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளதையும் விளங்கவைத்து மிக இனிமையுடன் வகுப்பை முடித்துதந்தார் ஆசிரியர்..!
அடுத்தமைந்த நேரங்களில் அறிவார்ந்த அவையாடல்கள் இடம் பெற்றன..! சமூக விழுமியங்களில் ஒன்றான திருமணஉறவு பற்றிய அவையோரின் முரண்பட்ட கருத்தோட்டங்கள் கலகலப்பாக அமைந்தன..! அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நால்வகை குணங்கள் பெண்ணியல்புக்கு ஏற்றதா...இல்லையா..என்ற பொறிபறக்கும் சூடான கருத்துப்பரிமாற்றங்களும்  அறையின் குளிர்சாதன வசதியைக் குறைத்தன.!
உதயம் உணவகத்தின் இனிய இரவு உணவோடு அன்றைய மாலை மயங்காது தெளிந்து அனைவருக்கும் மன நிறைவைத் தந்தது...! 
                                                                                                                     நன்றி..நன்றி...!

தொகுப்பு: திரு.முனு.சிவசங்கரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக