மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

புதன், 10 ஆகஸ்ட், 2011

திருக்குறள் வகுப்பு..! தி.ஆண்டு 2042, கடகம் 19

வணக்கம்..! இடைவேளையின்றி எப்போதும் இனிய திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமாம்..! ஒரு முன்னணி காட்சி ஊடகம் கூக்குரலிடுகிறது !
கண்ணீரைக் காசாக்கிப் பெண்ணினத்தை பின்னோக்கி  இழுக்கிறது.. சின்னத்திரை சித்திரங்கள்..! என்ன செய்யலாம் ? சோம்பிக் கிடப்பதற்கு தமிழனுக்குச் சொல்லியா தரவேண்டும் ? அவர்களைத் தூக்கத்திலிருந்து சுருக்கென்று குத்தி எழுப்ப ஒரு சூட்டுக்கோல் வேண்டும்..! அதற்காகத்தான்  இதோ இன்றைய வாரம் நம் வகுப்பாசிரியர் மடியின்மை அதிகாரத்தை நம் மனவெளியில் பதிக்கின்றாரோ..!
திருவள்ளுவர் குடிபெருமை பற்றி இந்த அதிகாரத்தில் மிகுதியாகவே கூறுகின்றார். ஆசிரியர் அதை கருத்துவேற்றுமைக்கு இடமின்றி குடி என்றால் குடும்பம் என்றும் பரம்பரை என்றும் தலைமுறை என்றும் கூறி அமட்டியது குறிப்பிடவேண்டியது.!
விளக்கை வைத்து முதல் குறளை தொடங்கிய வள்ளுவனின்  வாய்மொழியை பின்பற்றி  சுறுசுறுப்புடன் வகுப்பைத் தொடங்கினார் ஆசிரியர். ! ஒரு குடி ஆவதற்கும் அழிவதற்கும் தீய வழிகளில் செல்வதற்கும் சோம்பலே காரணம் என்று அடுத்த வந்த மூன்று குறள்களின் பொருளையும் விளக்கி தனக்கு பிடித்தமானது என்று ஐந்தாவது குறளை கூறினார்.!
அரசரின் துணையே இருந்தாலும் முயற்சி இல்லாதவர் முன்னேற மாட்டார் எனவும் அந்த அரசரும்கூட முயற்சியற்று இருப்பின் அமைச்சர்கள் இடித்துரைக்கும் நிலைக்கு ஆளாவார் எனவும் பகைவர்க்கு அடிமை ஆக நேரிடும் எனவும் தொடர்ந்த குறள்களின் வழியே வள்ளுவரின் கருத்தை வலியுறுத்தினார் ஆசிரியர்..! குடியின் பெருமை குலைந்து போயிருந்தாலும் முயற்சியுள்ள ஒருவர் அக்குடியை நிமிர்ந்தெழ வைத்துவிட முடியும் என்ற கருத்தை ஒன்பதாவது குறள்மூலம் விளக்கிக்கூறினார் ஆசிரியர்..! இறுதியாக மடியில்லாத மன்னவன் இந்தமாநிலம் முழுவதும் ஆளமுடியும் என்று புராண எடுத்துக்காட்டு மூலம் எடுத்துரைத்து வகுப்பை இனிமையாக நிறைவு செய்தார் ஆசிரியர்..!
அன்றைய தினம் ஆசிரியர் தாயகத்துக்கு பயணம் செல்லும் அவசரத்தில் இருந்தார்..! அப்போது பொங்கு தமிழ் மன்றத்தின் சார்பாக வேருக்கு நீர்தேடும் தாய்தமிழ்ப் பள்ளிக்கு உருபாய் ஒரு இலட்சம் காசோலையாக அவரிடம் கொடுத்தனுப்பபட்டது...! ஒரு நெகிழ்வான செய்தி என்னவெனில் சேர்ந்த நன்கொடை ஒரு இலட்சமாக முழுமைபெற பத்தாயிரத்தை மன்றம் சுமை ஏற்றிருந்தது !  அதை தன் தோளில் தாங்கிக்கொண்டார் தமிழ்த்திரு.பாலமுத்துகுமரன் அவர்கள்..!
பிறகு கருத்தாடல்கள் தொடர்ந்தன. "ஓய்வு என்ற ஆடை அழகானது. ஆனால் அதை தொடர்ந்து அணியக் கூடாது.." என்று படித்தக்கருத்தை பதிவுசெய்தார் அருணாமாணிக்கவாசகம் அவர்கள்!
"ஓய்வு என்பதும் சலிப்பென்பதும் தற்கொலைக்கு சமம்" என்ற பெரியாரின் கருத்து  வகுப்பில் வலிமையுடன் பதியப்பட்டது.! சமூகத்தை சீர்கெடுக்கும் தீய பழக்கங்களை ஒழிப்பதில் அரசாங்கத்தின் கடமை பற்றியும் ஊடங்கங்களின் கடமைப் பற்றியும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது..!  இறுக்கமான இலக்கண விதிகளோடும் எடுத்துக்கொண்ட கருத்தை வழுவாது நின்று வலியுறுத்திக் கூறுவதாலும்தான் திருக்குறள் அதிகாரம் அதிகாரமாக அமைக்கப்பட்டது என அருளாளர் திரு. புருஷோத்தமன் அவர்கள் அதிகாரத்துக்கு பொருள் கூறியது குறிப்பிடத் தகுந்தது..! 
மனிதர்களுக்கு தூக்கம் ஒருநாளைக்கு எத்தனை மணி நேரம் அவசியம் என்பதில் பலவேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன ..! இறுதியாக உதயம் வழங்கிய அருமையான இரவு உணவோடு வகுப்பு இனிதே நிறைவெய்தியது..! சூழலின் காரணமாக இன்றைய வகுப்பு தமிழ்த்திரு. இரவி கண்ணன் அவர்கள் வீட்டில் நடத்தப்பட்டது நன்றிக்கு அப்பாற்பட்டது..!   

நன்றி..!                     
                                                                              முனு. சிவசங்கரன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக