மொழி கலை இலக்கியத்தளத்தில்...

மாற்றத்தை மாற்றிவிடும் நம்பிக்கையுடன்

புதன், 24 ஆகஸ்ட், 2011

திருவள்ளுவர் ஆண்டு 2042, மடங்கல் 01 வியாழன் மாலை [ 18 -08 -2011]

திருக்குறள் வகுப்பு

வணக்கம்..! பெண்கள் மென்மையானவர்கள்..சிறியத் துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள்..என்பது ஆண்களின் தவறான நினைப்பு..! ஏன் சிலப் பெண்களும் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.! அதனால்தான் திருமணம் நடக்கும்போது பெண்ணைப்பெற்றவர்கள் மாப்பிள்ளையிடம் என் பெண்ணை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள் ! ஆனால் உண்மை அதுவல்ல. வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் பெண்கள் உறுதியான மனநிலையில்தான் துயரங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்கிறார்கள்..! எடுத்துசொல்ல வேண்டுமெனில்  தமிழீழப்போரில் பெண் போராளிகள் அணிஅணியாக பங்கெடுத்துக் கொண்டதை நாம் அனைவருமே கனத்த மனத்தோடு கவனித்துக் கொண்டுதானே இருந்தோம்...! ஆகவேதான் இந்தவார அதிகாரமான இடுக்கண் அழியாமைக்கு   திருமதி.பாரதி தமிழ்நாடனை ஆசிரியையாக வகுப்புத் தேர்ந்தெடுத்துக் கொண்டது சாலப்பொருந்தியது..!

திரு.இராமன்பொன்னி அவர்களின் இல்லத்தில் வகுப்பு எப்போதும்போல் மாலை ஏழுமணிஅளவில் இனிமையாகத் துவங்கியது.! இடுக்கண் வருங்கால் நகுக என்னும் முதல் குறள் எல்லோரும் அறிந்த குறளாக இருப்பினும் உணர்ந்த குறளாக இல்லை என்பதற்கு பெருகிவரும் தற்கொலை முடிவுகளே சான்றுகள்..! எனவேதான்  தாயுள்ளத்தோடு சாலப்பரிந்து பிள்ளைகளிடம் இருந்தே படிப்பினையைத் தொடங்க வேண்டும் என்றார் நம் ஆசிரியை..!

அடுத்த இரண்டு குறள்களிலும் துன்பத்தைக்கண்டு துவளாதவர்களை குறிப்பிடும் வள்ளுவரைப் பாராட்டி வகுப்பைத் தொடர்ந்தார் ஆசிரியை..! மஞ்சுவிரட்டில் எதிர்த்து வருவோரையெல்லாம் கண்டு சிறிதும் பின்வாங்காமல் பகடு (காளை) முன்னேறுவதில் மட்டுமே குறியாக இருப்பதை ஆசிரியை வள்ளுவக் கருத்தோடு ஒட்டி விளக்கியது நான்காம் குறளுக்கு நயம் சேர்த்தது.! பிள்ளைகளிடம் வெற்றியின் இனிப்பை மட்டுமே ஊட்டி வளர்க்காமல் தோல்வியின் துவர்ப்பையும் சுவைக்க பழக்கவேண்டும் என்று ஆசிரியை ஆழ்ந்து கூறி  இன்றைய போட்டியும் பொறாமையும் நிறைந்த பெற்றோர்களின் தலையில் நங்கென்று ஒரு குட்டு குட்டினார்..!

சிலந்தி- வலை- சிந்தனை பழையதே என்றாலும்
சிக்கல் வரும்போது யாரும் சீர்தூக்கிப் பார்ப்பது இல்லையே..! அதனால்தான் ஆசிரியை ஐந்தாம் குறளுக்கு அதை மீண்டும் அடிக்கோடு இட்டுக் காட்டினார் ! போதும் என்ற மனம் உள்ளவர்கள் செல்வம் வரும்போதும் போகும்போதும் ஒரே மனநிலையில்தான் இருப்பார்கள் என்று ஆறாம் ஆறாம் குறளை விளக்கிய ஆசிரியை, அனுபவம் உள்ளவர்களும் மூத்தோர்களும் உடம்பிற்கு நோய் வரும்போது அதைக் கண்டு அஞ்சாமல் பக்குவமாக அந்த நோயை விரட்டும் வழியை கண்டடைவார்கள் என்று அடுத்தவந்த குறளுக்கும் பொருள்கூறி வகுப்பை தொய்வின்றித் தொடர்ந்தார் ஆசிரியை.!

இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை என்றும் அதை ஏற்றுக்கொள்வதே வளர்ச்சியின் முதற்படி என்றும் துன்பத்தையும் இன்பமாக நினைத்தால் துன்பம் நம்மைவிட்டு தூரவிலகி போய்விடும் என்றும் தொடர்ந்துவந்த குறள்களுக்கு பொருள் கூறினார் ஆசிரியை..! புடம்போடும்போது தங்கமும் பொலி இடும் போது சிற்பமும் வலித் தாங்குவதால்தான் பொலிவுற  முடிகிறது என இறுதிக் குறளுக்கு எல்லோரும் விளங்கிக்கொள்ளும்படி எடுத்துக்காட்டுக்களோடு பொருள் கூறி இன்னல் வரும்போது இன்முகத்துடன் ஏற்றுக்கொள்பவரை எதிரியும் மதிப்பார் என்று அருமையான விளக்கத்தையும் கூறி வகுப்பை இனிதே நிறைவு செய்தார் ஆசிரியை...!

தொடர்ந்த கருத்தாடலில் பிள்ளைவளர்ப்புப் பற்றி பெரிதும் பேசப்பட்டது..! ஏறு என்ற சொல் காளைக்கும் பொருந்தும். அது வெறும் பெயராக மட்டும் இல்லாமல் அதன் குணத்தையும்  குறிப்பதாக இருப்பது  தமிழ்ச் சொற்களின் சிறப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று வகுப்பு தமிழோடு விளையாடி மகிழ்ந்தது..!

தமிழர்கள் இடையில் தமிழ்மொழிப் பற்றிய மதிப்பீடுகள்  குறித்து வகுப்பு வரிந்துகட்டி  வாள் வீசினாலும் புரிந்துகொண்டு கைகோர்த்துக் களித்தது.!
அருமையான இரவு உணவு வழங்கும் உதயம் உணவகத்தை நெஞ்சார வாழ்த்தி இரண்டு பசியும் இனிதே தீர...வகுப்பு கனிந்த மனதுடன் கலைந்தது..!

நன்றி..!                                 முனு. சிவசங்கரன்..!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக